தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அளிக்கப்பட்ட தொடர் விடுமுறையால், சென்னையில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்கள், விடுதியில் தங்கியிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு சென்றனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்த நிலையில், மீண்டும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் லட்சகணக்கான மக்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கொண்டிருக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஒரே நேரத்தில் அதிகபடியான வாகனங்கள் வந்தடைந்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைப்போல திருப்பூர் மாவட்டம் பல்லடமும் வாகன போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. தீபாவளி பண்டிகையையொட்டி வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பேருந்துகள், கார், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பம் குடும்பமாக பல்லடம் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் நான்கு திசைகளிலும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தினால் மட்டுமே, இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை உள்பட வெளியூர்களுக்கு திரும்பி செல்ல, தென்காசி பேருந்து நிலையத்தில் பயணிகள் அலைமோதினர். செங்கோட்டை, தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், சென்னை, பெங்களூர் மற்றும் கோவைக்கு சிறப்பு பேருந்துகளில் பயணித்தனர். பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.