"மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்றால், தமிழ்நாடு கானல் மாநிலமாக மாறிவிடும்" பீட்டர் அல்போன்ஸ் பேச்சு!

"மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்றால், தமிழ்நாடு கானல் மாநிலமாக மாறிவிடும்" பீட்டர் அல்போன்ஸ் பேச்சு!

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமராக பதவி ஏற்றால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கானலாக மாறிவிடும் என தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியுள்ளார்.

அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முன்னாள் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த எஸ் இளைய பெருமான் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற எஸ் இளையபெருமாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் ஆல்ஃபோன்ஸ் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, உ பலராமன், எஸ் சி பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உள்ளிட்டோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி பிரிவின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ள அனைத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பிட்டர் அல்போன்ஸ், வரலாறு தெரியாத ஒரு இயக்கம் வெற்றி பெற்றதாகவும், வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லை என தெரிவித்தார். எல்.இளையபெருமாளை 20 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்தி காங்கிரஸ் கட்சி அழகு பார்த்தது எனவும் அவரின் நினைவுகளை இன்று வரை இந்த சமூகம் நினைவு வைத்திருக்கின்றது என்று சொன்னால் அதற்கு காங்கிரஸ் கட்சி அவரை தூக்கிப் பிடித்தது தான் காரணம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, எந்த அரசியல் கட்சியின் மேடையிலாவது தலித் மக்கள் இப்படி கம்பீரமாக உட்கார வைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர் அரசியல் சாசன சட்டம் அமைப்பதற்கு யாரை கொண்டுவர வேண்டும் என்ற மிகப்பெரிய விவாதம் நடைபெற்றதாகவும் அப்போது காந்தியடிகளும் நேருவும் முடிவு செய்து அம்பேத்கருக்கு அந்த பொறுப்பை வழங்கியதாக குறிப்பிட்டார்.

மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் பாபு ஜெகஜீவன் ராம் தான் என குறிப்பிட்ட அவர், கரை படாத  கைகளுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அது இன்றுவரை தான் கிறிஸ்து சமுதாயத்தில் இருந்து தலைவராக உருவான கக்கன்  அவர்கள் தான் என புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் கட்சி அடையாளம் கண்ட தலித் சமூகத் தலைவர்கள்  அந்த சமுதாயத்திற்கு மட்டும் பாடுபடவில்லை எனவும் அனைத்து சமூகத்தினரும் போற்றக் கூடிய தலைவர்களாக உள்ளதாக குறிப்பிட்ட அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டு வெளியில் சென்ற பல்வேறு தலைவர்கள் தங்களது கடைசி காலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்து இணைந்து விட்டனர் என்றும்  அப்படி இருப்பவர்களில் வெளியே சென்று ஜி.கே.வாசன் மட்டும் தான் இன்னும் இங்கு வராமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அகில இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? மதசார்பின்மையை பாதுகாப்பதா? என்ற கேள்வி இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாட்டையே பாதுகாப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமராக பதவி ஏற்றால் தமிழ்நாடு கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கானல் மாநிலங்களாக ஆகிவிடும் என்றும்  தென்மாநிலங்கள் வெறும் வரி செலுத்தும் மாநிலங்களாக மட்டுமே இருக்கும் அதிகாரத்தில் இருக்கும் உரிமையை இழந்து விடும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், "கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வருகின்ற மனித படுகொலைகள் எந்த விதமான முடிவும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றியத்தில் ஆளுகின்ற மோடி அரசும் உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷாவின் செயல்படும் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், "உலகத்திலேயே மிகப்பெரிய ராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கின்ற இந்திய அரசு நினைத்தால் 5 நிமிடங்களுக்குள் அந்த கலவரத்தை அடக்க முடியும். எல்லை பாதுகாப்பு படை போலீஸ் படை என்று அதிநவீன காவல் படையை கையில் வைத்திருக்க கூடிய நம்முடைய அரசு. 20 லட்சம் மக்கள் மட்டுமே வாழுகின்ற ஒரு சிறிய மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறுகின்ற படுகொலையை தடுக்க முடியவில்லை என்று சொன்னால் அந்த அரசை கையாலாகாத அரசு என்று தான் சொல்ல முடியும் எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து, "சமூகத்திலே மிகப்பெரிய பதட்டம் ஏற்பட்டு மணிப்பூரில் ஏற்பட்டிருக்கக் கூடிய வன்முறையின் விளைவாக தேசம் முழுவதும் மோடி அரசின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை முழுவதுமாக இழக்க கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த படுகொலையை தடுக்க முடியாத அரசுக்கு வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் பதில் செல்வார்கள்" என தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கு திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வரும் என  முன்னாள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் மதசார்பற்ற  கூட்டணிக்கும் வருவதற்கு தான் பல கட்சிகள் கதவை தட்டிக் கொண்டுள்ளதாகவும், இங்கே இருந்து எந்த கட்சியும் எதற்காகவும் போக மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:"மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை" அமைச்சர் முத்துசாமி விளக்கம்!