10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி...பள்ளிக்கு சென்று தேர்வெழுத அனுமதிக்க கோரி மனு...வாபஸ் பெற்ற மனுதாரர்!

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி...பள்ளிக்கு சென்று தேர்வெழுத அனுமதிக்க கோரி மனு...வாபஸ் பெற்ற மனுதாரர்!

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும், இடைநின்ற மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கு சென்று தேர்வெழுத அனுமதிக்கும் வகையில் திட்டம் வகுக்க உத்தரவிடக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்கள், இ.எம்.ஐ.எஸ். எனும் கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாவிட்டாலும், தோல்வியடைந்தாலும் மீண்டும் பள்ளி சென்று பத்தாம் வகுப்பு படிக்க முடியாது. மாறாக தனியார் விண்ணப்பதாரராக மட்டுமே தேர்வெழுத முடியும்.

இந்த நடைமுறையை மாற்றி, தோல்வியடைந்த மாணவர்களும், இடைநின்ற மாணவர்களும் வழக்கமான முறைப்படி பள்ளி சென்று, மற்ற மாணவர்களுடன் தேர்வெழுத அனுமதிக்கும் வகையில் திட்டம் வகுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பெண்கள் இயக்கத்தின் செயலாளர் வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தற்போது பின்பற்றப்படும் இந்த நடைமுறை காரணமாக தோல்வியடைந்த, இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளி சென்று கல்வி பெறும் வாய்ப்பை இழந்து விடுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறையை மாற்றுவதன் மூலம், தோல்வியடைந்த, இடைநின்ற மாணவர்கள் அதே வகுப்பில் மீண்டும் படித்து பயன்பெற முடியும் என்பதால், இதுசம்பந்தமாக புதிய திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவர் கஜேந்திரனை பள்ளியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதையும் படிக்க : தமிழக மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அணுகலாம் எனத் தெரிவித்தது.

மேலும், ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில், கூடுதல் மாணவர்களை சேர்க்கும்படி எப்படி உத்தரவிட முடியும் எனவும், பொதுநலன் என்பதற்காக சட்டத்துக்கு விரோதமாக எப்படி உத்தரவிட முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இடைநின்ற மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், திண்டுக்கல் மாணவருக்கு மீண்டும் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் P.முத்துக்குமார் தெரிவித்தார். அதேசமயம் பொதுநல வழக்கில் தனிப்பட்ட மாணவருக்கு சாதகமாக உத்தரவிட எப்படி கேட்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.