கோவில் வழிபாதை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரிடையே ஆயுதங்களுடன் பயங்கர தாக்குதல்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோவில் வழிபாதை தொடர்பாக எழுந்த பிரச்னையில் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் பாட்டில் குண்டுகளுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் வழிபாதை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரிடையே ஆயுதங்களுடன் பயங்கர தாக்குதல்...

நாகர்கோவில் அருகே சின்னனைந்தான்விளை பகுதியில் பிச்சகாலசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோயிலில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோயில் பராமரிப்பு பணியை அந்த பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆதீன மடத்தின் ஏற்பாட்டின் பேரில் நிலம் வாங்கப்பட்டு கோயிலுக்கு அலங்கார வளைவு, சுற்றுசுவர் கட்டுமான பணிகள் தொடங்கின. இது தொடர்பாக மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கார், பைக்குகளில் வந்த 20 பேர் கொண்ட கும்பல், கோயில் வளாகத்துக்குள் புகுந்து டியூப் லைட், சேர்கள் உள்பட அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன், கடப்பாரை கம்பிகள் கொண்டு சுவரையும் இடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆயுதங்களுடன் வந்திருந்த கும்பல், பீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் நிரப்பி, திரி போட்டு தீ வைத்து வீசியுள்ளனர். இதனால் சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த சமயத்தில் பொதுமக்கள் திரண்டு, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்களை கைது செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.