காவல்துறையினர் ஏற்கனவே அதிக மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  

காவல்துறையினர் ஏற்கனவே அதிக மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கடந்த மே மாதம் திருச்சி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெப்பக்குளத்தான்கரை பகுதியில் 5 இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோ ரிக்‌ஷாவில்  பயணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த இளைஞர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டதோடு, தாக்க முயன்றுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த காஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாமல் மனுதாரர் பயணம் செய்துள்ளார் என்றும் இது குறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பிய போது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர். ஒரு வைரஸ் பலரது உயிரை எடுத்துச் செல்லும் சூழலில் ஒவ்வொருவரும்  உணர்ந்து செயல்பட வேண்டும். அதோடு காவல்துறையினர் தங்களது பணிகளைச் செய்கிறார்கள். 

அவர்கள் கேள்வி எழுப்புகையில், உரிய முறையில் அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். காவல்துறையை  துஷ்பிரயோகம்  செய்வது, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது ஏற்க இயலாது என கருத்து தெரிவித்தார்.

 இந்த கொரோனா நோய் தொற்று சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்துப்படும் விவகாரங்களில் இந்த நீதிமன்றம் மென்மையாக இருக்கப்போவதில்லை என கூறினார்.

.இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரி நீதிமன்ற பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் பத்தாயிரம் ரூபாயை மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் கூட்டமைப்பிற்கு வழங்கவும் உத்தரவிட்டு  மனுதாரரை கைது செய்ய இடைகால தடை விதித்தும் வழக்கை ஜூன் 14ஆம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்தனர்.