16 பேர் கொண்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்த காவல்துறை... மொத்தமாக தூக்க பக்கா ஸ்கெட்ச்!!

சென்னையில் 16 பேர் கொண்ட ரவுடிகளின் பட்டியலை காவல்துறை தயார் செய்துள்ளனர்.

16 பேர் கொண்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்த காவல்துறை... மொத்தமாக தூக்க பக்கா ஸ்கெட்ச்!!

ஒருகாலத்தில் மிகப்பெரும் 'டான்'கள் சாம்ராஜ்யம் அமைத்திருந்த பகுதி வட சென்னை.. கேட் ராஜேந்திரன், நாகேந்திரன், டான் சேரா, வெள்ளை ரவி, பாக்ஸர் முரளி கல்வெட்டு ரவி என வடசென்னை ரவுடிகளை பட்டியவிட்டால் நீண்டு கொண்டே போகும்.... ரவுடிகளுக்கு இருக்கும் மவுசு, அதிகார பலம், படை பலம் பார்த்து இளசுகளும், பொடிசுகளும் கூட ரவுடி ஆக வேண்டும் என்கிற போதையில் திரிந்த போது, அப்படி ஒரு இடத்தில் இருந்து உருவானவர் தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி. 

90 களின் தொடக்கத்தில் பள்ளிபருவத்தில் இருந்த பாலாஜிக்கு அப்போதே தான் பெரிய ரவுடி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு, ஏரியா ரவுடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு சிறு சிறு பணிவிடைகள் செய்ய தொடங்கி மெல்ல மெல்ல கத்தியைப் பிடிக்க ஆரம்பித்தார். காக்கா தோப்பு பாலாஜி என்கிற பெயர் அறியப்பட்டது. 2000 வது ஆண்டில் நடைபெற்ற புஷ்பா கொலை வழக்கு, காக்கா தோப்பு பாலாஜி செய்த முதல் கொலை அது. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு ஏழு கிணறு பகுதியில் தலித் பாலு என்பவரை கொலை செய்ததன் மூலம் காக்கா தோப்பு பாலாஜி பிரபலமானார். 

2011 ஆம் ஆண்டு மின்ட் பகுதியில் வீட்டின் கூரையை பிய்த்து உள்ளே புகுந்து பில்லா சுரேஷ் என்பவரை அவரது மனைவி கண்முன்னே கொலை செய்த காக்கா தோப்பு பாலாஜி அப்போது ஒரு பிரபல 'டான்' ஆக உருவெடுத்து இருந்தார். அதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அப்போது வட சென்னையில் பிரபலமாக இருந்த பல ரவுடிளின் எதிர்பாராத மறைவு  பல்வேறு காரணங்களால் சில ரவுடிகள் வட சென்னையில் இருந்து வெளியேறுவது  என காக்கா தோப்பு பாலாஜியின் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனது.

வட சென்னையில் கொலை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தொடங்கிய பாலாஜி ஒரு கட்டத்தில் துறைமுகம் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். கண்டெய்னர் வருவதற்கும், செல்வதற்கும் மாமூல் என தொடங்கி சில தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் நட்பு மூலம் செம்மரக் கடத்தல் வரை பாலாஜியின் அதிகாரம் நீண்டுகொண்டே போனது. 

வட சென்னைக்கு காக்காதோப்பு பாலாஜி, தென் சென்னைக்கு சி.டி.மணி என தங்களுக்குள் எல்லைகளை பிரித்துக்கொண்ட இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேசக்கரம் நீட்டிக்கொண்டதால் மற்ற ரவுடிகளின் டார்கெட்டுக்கு உள்ளானார்கள். ஆனாலும் ஸ்கெட்ச் போடுவதில் சி.டி.மணியம், செயல்படுத்துவதில் காக்காதோப்பு பாலாஜியும் கில்லாடிகள் என்பதால் ஒவ்வொரு முறையில் தப்பித்துக் கொண்டே இருந்தனர் இருவரும். அதே நேரம் தங்களுக்கு எதிராக உருவெடுப்பவர்களை இருவரும் கூட்டாக சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அரங்கேறின. கடந்த ஆண்டு அண்ணா சாலையில் காக்கா தோப்பு பாலாஜியும், சி.டி.மணியும் காரில் சென்றபோது அவர்களது எதிரிகளால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது மயிரிழையில் இருவரும் உயிர் தப்பி சென்றனர். இந்நிலையில் சென்னையை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். 

சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் சென்னையில் ரவுடியிஸம் கட்டப்பஞ்சாயத்து ஒழிக்கப்படும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதன் முதல் படியாக சி.டி.மணியையும், காக்கா தோப்பு பாலஜியையும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியதோடு அதனை நிறைவேற்றி உள்ளார். தற்போது இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக்கைதிகளுக்கான மருத்துவப் பிரிவில் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களின் சிகிச்சையில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னையில் மக்களின் பயத்தில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திய 16 பேர் கொண்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து வருவதாகவும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த போவதாகவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அண்மையில் தெரிவித்திருந்தார்.  ஆனால் இதில் பலருக்கும் மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது அந்த சந்தேகம் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குற்றப்பிரிவில் கருதப்படும் சிறிய வகை குற்றமான கஞ்சா விற்பனையில் கைது செய்யப்படுவதும். மாறாக அவர்கள் கைது செய்யும் இடங்களை மறைத்தும் கூறுவதன் அவசியம் என்ன என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ரவுடி சிடி மணி கைது விவகாரத்தில் அவரது தந்தையிடம் சிடி மணியை உயிருடன் விடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கேட்டதாகக் கூறி அவரது தந்தை தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இவை அனைத்தும் காவல்துறையினர் ரவுடிசத்தை அடக்கும் முயற்சியாக எடுத்துக் கொள்வதா அல்லது ரவுடிகளின் போலீஸ் மீதான பயத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் காவல்துறை செயல்படுகிறதா என்கின்ற கேள்வி பலருக்கும் எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்