ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல்....தப்பியோடிய மர்மநபருக்கு வலைவீச்சு....

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 23.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல்....தப்பியோடிய மர்மநபருக்கு வலைவீச்சு....

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. இதற்கிடையில் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலி பெட்டியில் ஏறி சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது எஸ்-4 பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டையில்  16.5 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.  இதேபோல் ரயில்வே எஸ்பி இளங்கோவுக்கு அதே ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீண்டும் சோதனை செய்த போலீசார் மற்றொரு ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னதாக போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த மர்ம நபர்கள் கஞ்சாவை ரயில் பெட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ரயில்வே வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.