முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி அதிரடி கைது!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகாரளித்த விஜய நல்லதம்பி அதிரடி கைது!!

ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் உதவியாளர்கள் உட்பட நான்கு பேர்மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது. அன்றே காரில் சென்று தப்பித் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 இந்த நிலையில், 19 நாள்கள் கழித்து, கர்நாடக மாநிலத்தில் அவர் கைதுசெய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-க்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 4 வார காலத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வெளியூர் செல்லக்கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைவாங்கி தருவதாக ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார். விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி மோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.