பொன்னை, பாலாற்றில் வெள்ளபெருக்கு -பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, பார்க்கவோ செல்ல வேண்டாம்…

பொன்னை மற்றும் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, பார்க்கவோ செல்ல வேண்டாம் என வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னை, பாலாற்றில் வெள்ளபெருக்கு -பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, பார்க்கவோ செல்ல வேண்டாம்…

ஆந்திர மாநிலம் கலவகுட்லா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமான 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதனால் பொன்னை ஆற்றிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொன்னை மற்றும் பாலாற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, பார்க்கவோ செல்ல வேண்டாம் என ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் உத்தரவை மீறி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் பொன்னை ஆற்றின் தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே மோர்தானா அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உபரி நீர் வலது மற்றும் இடது புற கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கால்வாய் மதகுகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.