போதைப் பொருள் கடத்திய வழக்கு; போர்ச்சுகல் நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பிரேசில் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொகைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் இருந்து, சென்னைக்கு விமானத்தில், போதைப்பொருள் கடத்தி வருவதாக, தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, 2018 மே 5ல் சென்னை விமான நிலையத்தில், 'எமிரேட்ஸ்' விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனையிட்டதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த டொமிங்கோஸ் மென்டிஸ் அபோன்சோ என்ற பயணியின் ட்ராலி பேக்-கில் உணவு பொருட்களுடன் மறைத்து வைத்திருந்த, 1 கிலோ 800 கிராம் எடையுள்ள கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து  டொமிங்கோஸ் மென்டிஸ் அபோன்சோ  கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை 
விசாரித்த போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா,  குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, டொமிங்கோஸ் மென்டிஸ் அபோன்சோவுக்கு 10 ஆண்டுகள்  சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!