ஊராட்சி நிதியை எடுத்து விடலாம் என பகல் கனவு காணாதீர்கள்... தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... 

தென்காசியில், தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி நிதியில் எடுத்து விடலாம் என பகல் கனவு காணாதீர்கள் என்று, கிராம இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி நிதியை எடுத்து விடலாம் என பகல் கனவு காணாதீர்கள்... தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இதற்காக தேர்தலில் போட்டியிடக் கூடிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்களுக்கு வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் குருவிகுளம் யூனியன் பகுதிகளின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில் "ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்குகள் கேட்கப்படும் கேட்டு அறியப்பட்ட கணக்குகள் மீண்டும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வாங்கப்பட்டு சரி பார்க்கப்படும்" என்றும், "ஊழல் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர் புகைப்படம் பதவி போன்றவை குருவிகுளம் இளைஞர்களால் சமூக வலை தளங்களில் பகிரப்படும், மேலும் இதுகுறித்து மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்புத் துறையில் புகார் செய்யப்படும்" என்றும் அந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இளைஞர்களில் இந்த செயலால் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு விதமான பீதியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
இதே போன்று ஆலங்குளம் யூனியன் புதுப்பட்டி பகுதிகளில் நேற்று அப்பகுதி இளைஞர்கள் இதேபோல் வாசகங்களை சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.