பதவியை தவறாக பயன்படுத்திய ஊராட்சி ஒன்றிய தலைவர்....!!!

பதவியை தவறாக பயன்படுத்திய ஊராட்சி ஒன்றிய தலைவர்....!!!

பதவியை தவறாக பயன்படுத்திய கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெங்கிடபாளையம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெண் தலைவர்கள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டுமெனவும், அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

பெண் தலைவர்களின் பணிகளில் கணவர் உள்ளிட்டோர் தலையிடுவதாகவும், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள உண்ணாமலையின் கணவர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையிலேயே அமர்ந்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.  இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களில் ஒருவராக பாண்டிச்சேரி அரசையும் இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 300 ஆண்டுகள்....!!!