கட்டணம் செலுத்தாத மாணவர்களை அனுமதிக்காத தனியார் பள்ளி- பெற்றோர்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களை அனுமதிக்காத தனியார் பள்ளி- பெற்றோர்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் சென்ட் அசிசி எனும் தனியார் பள்ளியில் இன்று அரசு அறிவித்தபடி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிலும் இப்பள்ளிக்கு காலை முதலே மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வகுப்புகளுக்குள் அனுமதிக்கவில்லை. இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கல்வி கட்டணம் கேட்பது வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், மாணவர்களை அனுமதிக்காதது தொடர்பாக தனியார் பள்ளியின் மீது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.