திமுக அரசை கண்டித்து வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: அதிமுக தலைமை அறிவிப்பு

திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

திமுக அரசை கண்டித்து வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: அதிமுக தலைமை அறிவிப்பு
இதுகுறித்து, ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதியளித்த திமுக, தற்போது தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆட்சி அமைத்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் அளிப்பதாகவும் உறுதியளித்த நிலையில், தற்போது அது குறித்து வாயே திறப்பதில்லை எனக் குற்றம் சாட்டியதோடு, அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது என திமுகவினர் அர்த்தமற்று பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் நலன் காக்க, நெல்மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்யவும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியலை திமுக கையில் எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு, சொன்ன வாக்குறுதிகளை நிறவேற்ற வலியுறுத்தி, வரும் 28ஆம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிகளில், அதிமுகவினர் தத்தம் வீடுகளின் முன்பு கையில், பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.