தார்சாலையை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தனிநபர் ஒருவர் பொதுமக்கள் செல்லும் தார்சாலையை ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் கட்டி வருவதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

தார்சாலையை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...!

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் பாட்டப்பன் கோவில் பூசாரி பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டி வருவதாகவும், இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் அந்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இதுகுறித்து அந்த பகுதி மக்கள், மகுடஞ்சாவடி பகுதியிலிருந்து பாட்டப்பன் கோவில் வழியாக கலர்பட்டி, கோட்டைமேடு, கவுண்டன்காடு, உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான தார் சாலை மற்றும் அரசு நீரோடை புறம்போக்கு நிலங்களில் கோவில் பூசாரி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் பள்ளி வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சாலையை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம், கோவில் பூசாரி மிரட்டல் விட்டு வருவதாகவும் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் அப்பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி  மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.