"பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை" புதுச்சேரி ஆளுநர் குற்றச்சாட்டு!

"பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை" புதுச்சேரி ஆளுநர் குற்றச்சாட்டு!

"பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை" என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை  செளந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், புதுச்சேரியில் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். 17 ஆயிரம் பெண்களுக்கு இதுவரை உதவிதொகை கொடுத்திருக்கிறோம். மற்ற பெண்களுக்கும் விரைவில் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவினர் வாக்குறுதி ஒன்றை கொடுத்துவிட்டு யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் அளவு கோள்கள் மிகக் கடுமையாக இருக்கின்றன. என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஆட்சி முடிந்துள்ள நிலையில் இன்னும் மகளிர் உரிமை தொகை கொடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு செயல்பாடு இருக்கிறது. தமிழக ஆளுநர் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை எனக்கூறிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆளுநர் வேண்டாம் என்று திமுகவினர்  கடிதம் எழுதினார்கள் என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரை போய் பார்த்தார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது எனக் கூறிய தமிழிசை கருத்திற்கு எதிர் கருத்து சொல்லலாம், அப்படிச் சொன்னால் கருப்புக்கொடி காட்டுவேன், வெளிநடப்பு செய்வேன் எனக் கூறுவது தவறானது என குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:வடமாநிலங்களில் கனமழை; 34 பேர் உயிரிழப்பு!