இன்னும் 4 வாரத்திற்குள் குயின்ஸ் லேண்ட் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்…  

குயின்ஸ் லேண்ட் இன்னும் 4 வாரத்திற்குள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். சவால் விட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் 4 வாரத்திற்குள் குயின்ஸ் லேண்ட் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்…   

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோயில்களின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 1206 திருக்கோயில்கள் உள்ளன.

இத்திருக்கோயில்களில் திருப்பணி, திருத்தேர், திருக்களம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் பணியாளர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  திருக்கோயில்களில் கோயில் சம்மந்தப்பட்ட சொத்து விவரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை,  பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெயர்ப்பலகை வெளித்தன்மையுடன் வைக்கப்படும்.  குடமுழுக்கு நடைபெற தயாராக உள்ள திருக்கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தபடும் என்றும் கூறினார்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் எத்தனை தங்கச் சிலைகள் உள்ளது என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பாதுகாப்பு காரணமாக தங்கத்தாலான சிலைகளின் எண்ணிக்கை கூறமுடியாது. நிருபர்களுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்ட கோயில்களில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். தங்க கட்டிகளை சேமிப்பு கணக்கில் வைத்து அதில் வரும் வருவாயை கோவில் செலவினங்களுக்கு பயன்படுத்தும் கோவில்களின் பட்டியலை மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதலோடு இந்து சமய அறநிலைத்துறை விரைவில் வெளியிடும் என்றார். குயின்ஸ் லேண்ட் எப்போது கைபற்றப்படும் என்ற  நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர் குயின்லேண்ட் விவகாரத்தில்  அரசியல் பிரமுகர் சவால் விட்டிருந்தார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை குயின்லேண்ட் பயன்படுத்திய  நிலத்தை 4 வாரங்களுக்குள் கைப்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு சொல்வதை தான் செய்யும். சவால் விட்ட அரசியல் கட்சி பிரமுகர் தற்போது என்ன சொல்லப் போகிறார் என்று  கேள்வி எழுப்பினார்.