"மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இல்லாமல், காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது" ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

"மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இல்லாமல், காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது" ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

திமுக அரசு மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இருந்தது; இப்போது காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக உள்ளது என மதுரை விமான நிலையத்தில் எம்.எல்.ஏ வி.வி. ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார்.

நேற்று மதுரை விமான நிலையத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த, மதுரையில் திருமணத்தை முடித்த, காவல் அலுவலர் விஜயகுமார் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிற அளவுக்கு பணி சுமை காரணமா? அல்லது வேறு காரணமா? என்று இன்னும் தெரியவில்லை. இதற்கு கண்டனத்தை தெரிவிப்பதை விட முதலில் வருத்தத்தை பதிவு செய்கிறோம். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் காவல்துறையின் வரலாற்றில் நிகழ்பெற்றது இல்லை. காவல்துறை ஆணையம் இது குறித்து விசாரணை செய்து உடனடியாக நிலைமையை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று நடைபெற்ற நிகழ்வு யாரும் எதிர்பார்த்திராத, காவல்துறையில் இதுவரை நடந்திராத ஒன்றாகும். மொத்தத்தில் இந்த அரசு மிகவும் பலவீனப்பட்டு போயிருக்கிறது, மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இல்லாமல் காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,  இவ்விழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அடிப்படையில் அரங்கம் அமைக்கும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்திலும் சிறப்பான மாநாடாக நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். அந்த அடிப்படையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் காலை 7 மணி அளவில் அரங்கத்தை எடுத்து மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கால் கோல் விழா நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து, நிர்வாகிகள் கூட்டமும் இந்த மாநாடு எப்படி சிறப்பாக நடத்துவது குறித்தும் நடைபெற இருக்கிறது என பதிலளித்தார்.

இதையும் படிக்க:"அதிகாரம் என்னிடம் வரும்போது பேனா சிலையை உடைப்பேன்" சீமான் எச்சரிக்கை!