கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ராஜேந்திரபாலாஜி : 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ராஜேந்திரபாலாஜி : 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கினர். இதற்காக மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் செல்போன் எண்களை குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் போலீசாரின் வாகனத்தை கண்டு தப்பியோட முயற்சித்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.   

இந்த நிலையில்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் முன்பு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. நீதிமன்றம் முன்பு 200-க்கும் மேற்ப்பட்டப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குவிந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.