அதிமுக -பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை? ஜெயக்குமார் பேட்டி!

அதிமுக -பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை? ஜெயக்குமார் பேட்டி!

"அதிமுக – பா ஜக கூட்டணி குறித்து மறுபரிசீலிக்க வேண்டி வரும்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பா. ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையில் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர், 'அதிமுக ஒரு பிரம்மாண்ட மரம்', ஆனால்  பா. ஜ.க. சின்னஞ்சிரிய செடி என்பதை அண்ணாமலை மறந்து விடக்கூடாது என்றார். மேலும், அதிமுகவுடன் இருந்தால் மட்டுமே பா. ஜ.க.வுக்கு பலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 மேலும், 20 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி, சட்டப்பேரவைக்குள் செல்வதற்கு காரணமான அதிமுக குறித்து அண்ணாமலை அவதூறு பேசுவது சரியா? என கேள்வி எழுப்பி உள்ளார். அண்ணாமலையின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அதிமுக பா ஜக கூட்டணி குறித்து மறுபரிசீலிக்க வேண்டி வரும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து, கூட்டணி தர்மத்தை மீறி பேசி வரும் அண்ணாமலையை, பா. ஜ.க. மேலிடத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்றார். மேலும், அமித் ஷா, ஜே.பி. நட்டா போன்ற பா. ஜ.க. மேலிடத் தலைவர்கள் அதிமுகவுடன் இணக்கமாக உள்ள நிலையில், அண்ணாமலையின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்றார். அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று விமர்சித்த ஜெயக்குமார், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு எனவும் கூறியுள்ளார்.

மேலும், தலைமைக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைப்பவர். அதிமுக குறித்த பேச்சுகளை அண்ணாமலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார், அப்படி இல்லை எனில் அவர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!