வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 500 ஆண்டு கால பழமையான கணபதி சிலை மீட்பு... சிலை கடத்தல் கும்பலுக்கு வலை வீச்சு.

சென்னை விமானநிலையத்தில் சரக்கு விமானத்தின் மூலம் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 500 ஆண்டு கால பழமையான கணபதி சிலையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 500 ஆண்டு கால பழமையான கணபதி சிலை மீட்பு... சிலை கடத்தல் கும்பலுக்கு வலை வீச்சு.

சென்னை விமானநிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வந்த பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறை  அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது காஞ்சீபுரத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டு, ஒரு விண்ணப்பமும், அந்த சிலைக்கான மாடல் சிறிய சிலை ஒன்றும்  வந்திருந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு  செய்தபோது, அவா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சுங்கத்துறை  அதிகாரிகள், சிலை வைக்கப்பட்டிருந்த பார்சலில்  குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை மேற்க்கொண்டனர். அங்கு 5.25 அடி உயரத்தில் 130 கிலோ எடையில் மெட்டல் சிலை ஒன்று இருந்தது. அது புதிய சிலை இல்லை என்றும்,மிகவும் பழமையான சிலை என்றும் தெரியவந்தது.

உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள்  அந்த சிலையை பறிமுதல் செய்து,சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனா். அதோடு பழங்கால சிலையை ஆய்வு செய்யும் தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்தனா்.

அவா்கள் வந்து  சிலையை ஆய்வு செய்தபோது அந்த சிலை 400 லிருந்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. இந்த சிலை காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பழமையான கோவிலில் இருந்த சிலையாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த சிலையானது பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வழக்குபதிவு செய்த அதிகாரிகள், சிலையை வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்ட ஏஜென்சி, சிலை வைக்கப்பட்டிருந்த காஞ்சீபுரம் வீட்டின் உரிமையாளா்கள் உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.