”பேரிடர் நிதியிலிருந்து நிவாரணத் தொகை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் ”- விசிக எம்.பி. ரவிக்குமார்.

”பேரிடர் நிதியிலிருந்து  நிவாரணத் தொகை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் ”- விசிக  எம்.பி. ரவிக்குமார்.

விபத்து பேரிடர் போன்றவற்றில் உயிரிழப்பவர்களுக்கு முதலமைச்சர் பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக மாநில செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி படித்து 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்று மேல் படிப்பு படிக்கப் போகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கடலூர் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் ஆன ரவிக்குமார் கலந்துகொண்டு கீழ்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள முகாமில் தங்கிப் படித்த 30 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் :- 

இலங்கை அகதிகள் முகாமில் முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளது குறிப்பாக முகாம்களில் வசிப்பவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது, அவர்கள் அங்கு இல்லை எனக்கூறி அவர்களை பதிவிறக்கம் செய்வது அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக உள்ளது. இந்த முறையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

விபத்து பேரிடர் போன்றவற்றில் உயிரிழப்பவர்களுக்கு முதலமைச்சர் பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்,  மேலும் அதன் உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று பிரதமரின் நிவாரண நிதிக்கு உள்ள உச்சவரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநரும் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தை மறுத்து அதற்கு புறம்பாக செயல்படுவதையே நோக்கமாக வைத்துள்ளார். இதனை அனைத்து அரசியல் கட்சியினரும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆளுநர் மத்திய அரசு சொல்லி தான் இதை செய்கிறார் என்ற ஐயம் அனைவருக்குமே உள்ளது. எனவே ஆளுநர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அவர்தான் ஆளுநர் பதவியில் நீடிக்கலாமா என முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

நாடாளுமன்ற புதிய கட்டிடம் தேவை என்பதில் யாருக்கும் மறுப்பு இல்லை. அது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது அங்கு போய் செயல்படுவதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கட்டிடம் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறையும் செங்கோல் நிறுவுவதற்கு சொல்லப்பட்ட காரணமும் ஏற்புடையதாக இல்லை. அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அரசியலமைப்பு சட்ட சுயேசியான அதிகாரம் கொண்ட அமைப்புகளுமே மத்திய அரசின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டுள்ளது இது இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என தெரிவித்தார்.

இதையும் படிக்க    | ஒரே ஆணையில் 560 பேர் பணி நீக்கம்...கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர்...மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல்!