பூச்சி மருந்தில் கலப்படம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

பூச்சி மருந்தில் கலப்படம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ஆண்டிப்பட்டி அருகே மலைகிராமங்களில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவன பூச்சி மருந்தில் மணல், கற்கள், கருமை நிற சாயம் கொண்டு கலப்படம் செய்யப்படுவதால்  உரிய விலை கொடுத்து வாங்கியும் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை- மயிலை ஒன்றியம் நூற்றுக்கும் மேற்பட்ட மலைகிராமங்களை உள்ளடக்கியது. இந்த மலை கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் பூசணி,  அவரை,  இலவ மரம், கொட்டை முந்திரி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரை நம்பி பயிரிடப்படுகின்றன.

குறிப்பாக கோரையூத்து மலை கிராமத்தில் பூசணிக்காய் பயிரிடுவதற்காக பூசணி விதைகளை வாங்கிய விவசாயி மாயி, அவற்றை பாதுகாப்பதற்காக அருகில் உள்ள குமணன்தொழு கிராமத்தில் திம்மட் பூச்சி மருந்தை  வாங்கினார்.

ஒரு கிலோ எடை கொண்ட அந்த பூச்சி மருந்தை  ஒரு பாக்கெட் 250  ரூபாய்க்கு விலைக்கு கொடுத்து வாங்கிய அவர், பூசணி விதைகளை நட்ட பின்பு எறும்புகள், பூச்சிகள்  ஆகியவற்றிலிருந்து விதைகளை  பாதுகாப்பதற்காக அரிசியுடன் திம்மட் பூச்சி மருந்தை கலந்து விதைகளுக்கு அருகில்  தூவினார்.

அப்போது திம்மட் பூச்சிமருந்தில் பெரும் அளவு கற்துகள்கள், மணல் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தண்ணீரில் பூச்சி மருந்தை கலந்துபார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திம்மட் பூச்சி மருந்தில் பெரும் அளவு மணல் கருமை நிற சாயம் பூசப்பட்டு கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பத்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய பூசணி விதைகள் பூச்சி மருந்து கலப்படத்தால்  வீணானதாக வேதனை தெரிவித்த விவசாயி, தமிழக அரசு கலப்பட பூச்சி மருந்தை தயாரித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவோர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மலை கிராமங்களை உள்ளடக்கி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:இருப்பா... காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்!