கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட மீட்புக்குழுவினர்

சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை மீட்புக் குழுவினர் , மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட மீட்புக்குழுவினர்

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பலரும் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு மீட்புக் குழுவினர் அடங்கிய உயிர்காப்பு பிரிவு என்ற திட்டத்தை இன்று டிஜிபி தொடங்கி வைத்தார்.

மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த பத்து நிமிடத்தில் பெண்ணொருவர் கடல் அலையில் இறங்கி குளித்து கொண்டிருக்க திடீரென அலையின் வேகத்தில் சிக்கி கடலில் மூழ்கினார்.

இதை கவனித்த மீட்புக் குழுவான உயிர்காப்பு பிரிவினர் பாதுகாப்புக் கவச உபகரணங்களுடன் கடலுக்குள் இறங்கி உயிருக்குப் போராடிய அப்பெண்ணை மீட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்புக்குழு துவங்கப்பட்ட நாளே கடலில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.