அதிமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக, ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்!

அதிமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக, ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதிமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக, ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் சென்றபோது, அவர்களை அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர்  ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு கற்களையும் எறிந்து தாக்குதல் நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து இருதரப்பினர் மீதும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். இந்த மோதலில் காவல்துறையை சேர்ந்த 2 பேர் உட்பட 47 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, இருதரப்பு தலைவர்கள் மற்றும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் அளித்த அறிக்கையின்படி, தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வரும் 25ம் தேதி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என இருதரப்பினருக்கும் வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.