தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று காலை பத்து மணிக்கு மேல் வெளியிடப்படுகிறது. 

தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 1-ந் தேதி வாக்காளராகும் தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சம் பேரும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சம் பேரும் அடங்குவர்.  மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 342 ஆகும்.

இந்த நிலையில், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தங்கள் பெயரில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும், முகவரி மாறியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மேல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிடுகின்றனர். இந்த வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.