கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க, 182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 182 கோடியே 74 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி வரை, கொரோனாவால் உயிரிழந்த 36 ஆயிரத்து 413 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதைப்போல வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 130 கோடியே 36 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நெல் வயல்களில் ஏற்பட்ட சேதத்திற்கு 97 கோடியே 76 லட்ச ரூபாயும், தோட்டப்பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கு 32 கோடியே 60 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.