சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை....

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான முறைகேடு வழக்கில், சென்னை மாநகராட்சி பொறியாளர்களின் வீடுகள் உள்பட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை....

சென்னை எம்.ஆர்.சி நகரின் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு மற்றும் கோடம்பாக்கம் ரங்கராஜ புரம் மெயின் ரோட்டில் உள்ள ஆலயம் தொண்டு நிறுவன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதேபோல ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள TWO LEAF MEDIA  கட்டடம் மற்றும் ஆலயம் ஸ்பேஸ் கட்டிடத்தில் உள்ள கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவன கட்டடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மைலாப்பூர் சாய்பாபா காலனியில் கன்ஸ்ட்ரோமால் நிறுவனம், ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் சாலையில் உள்ள கல்பதரு அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் ஏஆர். இஎஸ். பிஇ நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள ஆலம் தங்கம் மற்றும் வைரம் ஜூவல்லர்ஸ் மற்றும் அபிராமபுரத்தில் உள்ள ராஜாமணி ராகவாச்சாரி என்பவரது வீட்டிலுல் ரெய்டு நடைபெற்று வருகிறது. அரும்பாக்கம், பெரியார் இவிஆர் சாலையில் உள்ள கன்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குநர் கிருஷ்ணசாமி முத்துகுமாரசாமி வீடு முகப்பேரில் உள்ள எஸ்.பி பில்டர்சை சேர்ந்த முருகேசன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

வேளச்சேரி ராம்நகரில் உள்ள எஸ்பி வேலுமணியின் நண்பரும் அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் பொறியாளர்களாக பணியாற்றி வரும் அடையாறு பகுதியைச் சேர்ந்த நந்தம்குமார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

திருநீர்மலையில் இயங்கிவரும் வேலுமணியின் பினாமி எனக் கூறப்படுபவரால் இயக்கப்படும்  கேசிபி கல்குவாரியிலும், வில்லிவாக்கத்தில் உள்ள பென்னி மற்றும் மாதவரத்தில் உள்ள தாமஸ் அய்யாதுரை வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்