5 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறேன்- சசிகலா கண்ணீர்

பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த பிறகு முதல் முறையாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

5 ஆண்டுகளாக என்  மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறேன்- சசிகலா கண்ணீர்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா, அங்கு மூன்று முறை சபதம் போட்டார். இதை அடுத்து சிறை தண்டனை அனுபவித்த அவர், தண்டனை முடிந்து வெளியில் வந்தார். அப்போதே, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்த நிலையில், கட்டுமானப் பணியைக் காரணம் காட்டி, அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து, அதிமுகவின் பொன் விழா கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்ல சசிகலா திட்டமிட்டார். அதன்படி, இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில், மெரினா கடற்கரைக்குப் புறப்பட்டார்.


சசிகலா சென்ற கார் மீது பூக்களைத் தூவி அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியில் உள்ள கோவில் ஒன்றில் சசிகலா வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து காரில் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். 
சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பயணத்திற்குப் பின், மெரினா கடற்கரையைச் சென்றடைந்த சசிகலாவை வரவேற்பதற்காக, தொண்டர்கள் திரண்டிருந்தனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு இடையே மெதுவாகச் சென்ற சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பார்த்ததும் உடைந்து போய் கண்ணீர் விட்டார். பிறகு, நினைவிடத்தின் மீது மலர் தூவிய அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 10 நிமிடங்கள் அங்கேயே மவுனமாக நின்றார்.