சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆருடம்  

அதிமுக பொன்விழா, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சசிகலா வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.  

சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆருடம்   

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அக்டோபர் 17ம் தேதியன்று அதிமுக தொடங்கி 50 ஆண்டு தொடக்கவிழா நடைபெறுகிறது..அதிமுக பொன்விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது..இந்த நிலையில், அதிமுக பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைப்பெற உள்ள நிலையில், அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டறிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வருகின்ற 16ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த  ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதன்முறையாக  சசிகலா செல்ல உள்ளதாகவும், தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வழங்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.