சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு... வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன..?

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசம் குறித்து  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு... வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன..?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்ததாக கூறி இருவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். 

இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்பட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணையை முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.