சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளாவிற்கு மாற்றக்கூடாது- தமிழக அரசு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளத்திற்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளாவிற்கு மாற்றக்கூடாது- தமிழக அரசு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை கேரளத்திற்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கோரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டதாகவும்,  எனவே, தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், வழக்கு விசாரணையை கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதனை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ரகு கணேஷ் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இரட்டை கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருவதால், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் சக கைதிகளால் தாக்கப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும், ரகு கணேஷ் மனுவில் தெரிவித்திருப்பது உண்மையல்ல என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற தேவையில்லை என்றும், வழக்கு விசாரணையை கேரளத்திற்கு மாற்றக் கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.