பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... விரைந்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவு...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... விரைந்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவு...
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை விரைந்து நிரப்பிட வேண்டும் என்றார். பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைகளை எவ்வித தொய்வுமின்றி உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிநாடுகளில் முதுகலை, ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தினை சீரமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.  
 
வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ், உடனடியாக வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதோடு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் வலியுறுத்திய முதலமைச்சர், பிற இனத்தவர்களிடம் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.