மலைக்கிராம குழந்தைகளுக்கு ஆட்டோ அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகம்.. உடனடியாக ஆக்ஷன் எடுத்த மாவட்ட ஆட்சியர்!!

தேனி மாவட்டம் போடி அருகே, மலைக்கிராம குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக, வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மலைக்கிராம குழந்தைகளுக்கு ஆட்டோ அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகம்.. உடனடியாக ஆக்ஷன் எடுத்த மாவட்ட ஆட்சியர்!!

போடி அருகே அமைந்துள்ள சிரைகாடு மலையில், 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால், முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், குழந்தைகள் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ செலவினை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது ஒரு பகுதி செலவை மலைக்கிராம மக்களை செலுத்தச்சொல்லி, பள்ளி நிர்வாகம் ஆட்டோ அனுப்ப மறுத்துள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைக்கிராம மக்கள் முறையிட்டதையடுத்து, ஆட்சியர் உத்தரவின் பேரில், பள்ளி நிர்வாகம் மீண்டும் ஆட்டோக்களை அனுப்பியுள்ளது. மேலும், புத்தகங்கள் வழங்கி மாணவர்களை வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மலைவாழ் கிராம மக்களுக்கு கல்வி அறிவு கிடைப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் முரளிதரனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.