குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட பள்ளி சீருடைகள்... விஷயம் பரவியதால் தீயிட்டு கொளுத்திய அவலம்...

ஆலங்குளம் அருகே குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட பள்ளி சீருடைகளால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள். வாட்ஸ் அப் மூலம் பரவியதால் குப்பை கிடங்கை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய அவலம்.

குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட பள்ளி சீருடைகள்... விஷயம் பரவியதால் தீயிட்டு கொளுத்திய அவலம்...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் ஊரில் மண் பொத்தை உள்ளது. இந்த மண் பொத்தையில் கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து குப்பைகளும் மக்கும் குப்பை மக்காத குப்பைகளும் தீயிட்டு எரிக்கப்படுவது வழக்கம். பேரூராட்சி தரப்பில் கொட்டப்பட்ட குப்பையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 20க்கும் மேற்பட்ட  சீருடைகள்  புதிதாக கிடந்துள்ளது.

மேலப்பட்டமுடையார்புரம் ஊருக்கு மிக அருகில் இருப்பதால் அந்த வழியே சென்ற பொதுமக்கள் அந்த சீருடைகளை குப்பைகளுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சீருடைகளை எடுத்த பொதுமக்கள்  அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். அரசு மாணவர்களுக்கு வழங்கும் பள்ளி சீருடைகளை இப்படி அலட்சியத்துடன் குப்பை கிடங்கில் கொட்டிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குப்பைகளில் கொட்டப்பட்ட பள்ளி சீருடைகளை பொதுமக்கள் வெளியில் எடுத்ததை ஒரு சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மர்ம நபர்கள் மாலையில் யாருக்கும் தெரியாமல் குப்பை கிடங்கு முழுவதும் தீ வைத்து எரித்துள்ளனர்.

எனவே சீருடைகளை கொட்டிய சம்பந்தப்பட்ட நபர்கள்தான் தீயிட்டு கொளுத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்பொழுது மேல பட்டமுடையார்புரம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.