"ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?" சீமான் கேள்வி!!

"ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?" சீமான் கேள்வி!!

ஸ்பீக் பார் இந்தியா என்ற தலைப்பில் பேசும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முதலில் தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்  தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு  கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று காலை  ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார்.

அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஸ்பீக் ஃபார் இந்தியா என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்து பேச வேண்டும்" என கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், "கர்நாடக மாநிலத்தில் பிஜேபியும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கின்றனர். ஆனால், தண்ணீர் திறந்து விட மறுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக திமுக தமிழகத்தில் வாக்கு சேகரிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி ஏன் சனாதனம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியதோடு இந்தியா கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் சனாதனத்தை ஆதரிப்பதாகவும் அந்த கூட்டணியில் திமுக ஏன் இருக்க வேண்டும், கூட்டணியில் இருந்து விலக  வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || "உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார்" அண்ணாமலை பேச்சு!!