"திமுக ஆட்சியில் 5428 கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன" சேகர்பாபு!

"திமுக ஆட்சியில் 5428 கோடி கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன" சேகர்பாபு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் சுமார் 5 ஆயிரத்து 428 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. சுமார் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்பட்ட தங்க தேரோட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆயிரத்து 118 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளதாக கூறினார். 

மேலும், 5 ஆயிரத்து 428 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.