செந்தில் பாலாஜி கைது; அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் கண்டனம்..!

செந்தில் பாலாஜி கைது;  அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் கண்டனம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே. என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்ப்பாபு உள்ளிட்டோர் வருகை தந்தனர். ஆனால் செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். 

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இது பழிவாங்கும் செயல் என்றும், மேற்கு வங்கம், டெல்லி என பாகக அல்லாத அரசு இருக்கும் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பல தவறான செயல்களைச் செய்து வருவதாகவும், அதேப்போன்று தமிழ்நாட்டிலும் தற்போது நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்தாகவும், துணை ராணுவ கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் மா. சுப்ரமணியன் மருத்துவ குழுவினரிடம் மருத்துவ நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார்,

தமிழ் நாட்டின் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும்,  எதிர்க் கட்சிகளை பணியவைப்பதற்காக, பயன்படுத்தும் பாஜகவின்‌ அவக்கேடான அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும், தேர்தல் நெருங்க நெருங்க இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும் எனவும்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

 இதையும் படிக்க     | செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார் " - எடப்பாடி பழனிச்சாமி.