செந்தில் பாலாஜி ஜாமின் மனு: இன்று விசாரணை!

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: இன்று விசாரணை!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 4 மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜியின் சிகிச்சை குறித்த ஓமந்தூரார் மருத்துவர்களின் அறிக்கை, அமலாக்கத்துறையினரின் உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கக்கோரியும், காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரியும் திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மற்றும் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான மனுக்கள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வரவுள்ளது.  

இதனிடையே நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு முதல் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி சிறைத்துறையில் பணியாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!