"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது" ஆளுநர் அதிரடி!

"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி  தொடர முடியாது" ஆளுநர் அதிரடி!

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு,  ஆயத் தீர்வைத் துறை  அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்கவும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கவும் முடிவெடுத்து, ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று பரிந்துரை கடிதம் அனுப்பினார். ஆனால், சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்து, கடிதத்தை திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில், இன்று அறிக்கை அளித்த ஆளுநர் மாளிகை, இலாகாக்களின் மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதே வேளையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வார் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில்பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால்  அவர் அமைச்சராக தொடர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க:வாழ்வின் அபாய கட்டங்களை கடந்து வந்த நடிகர்!