" உடல்நிலையை காரணம் காட்டி தப்பிக்க நினைக்கிறார் செந்தில் பாலாஜி " - தமிழ் மாநில காங்.மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர்.

" உடல்நிலையை காரணம் காட்டி தப்பிக்க நினைக்கிறார் செந்தில் பாலாஜி " -  தமிழ் மாநில காங்.மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை சரியில்லை என  காரணத்தை சொல்லி தப்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் விமர்சித்துள்ளார். 

தருமபுரி மாவட்டம் அரூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், மக்களுடைய வரிப்பணங்களை கொள்ளையடிக்க கூடாது, மிக சரியான அளவில் ஆதாரம் கிடைக்கப்படும் என்றால் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும். 

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைக்கு தன்னுடைய உடல்நிலை சரியில்லை என போலியான காரணத்தை சொல்லி தண்டனையிலிருந்து சிறையில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை மேற்கொள்கின்றார். அதையும் விழிப்போடு கண்காணிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறை போன்ற கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரினார். 

மேலும், இந்த சோதனைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,  கடந்த காலத்தில் அவர் செய்த குற்றத்திற்கான தொடர் நிகழ்வுதான் இந்த நடவடிக்கையே தவிர இதனை பழி வாங்கும் நடவடிக்கை என அரசியல் சாயம் பூசுவது ஏற்புடையது அல்ல எனவும்  குறிப்பிட்டார்.  

தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் மகன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு மிகப்பெரிய ஒரு தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறினார்.

அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்ற வாய்ப்பு இன்றைக்கு மறுக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், பள்ளிக்கல்வித்துறைக்கும் விளையாட்டு துறைக்கும் கூட்டுத்தொடர்பு இல்லாத காரணத்தினால் தேசிய அளவில் தமிழக மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பறிபோய் இருக்கிறது என சாடினார். அதோடு,  இதற்கு சாதாரணமான ஒரு பதிலை சொல்லியிருப்பது, ஏற்புடையது அல்ல எனவும், இது மிகப் பெரிய அளவில் தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்திருக்கிற துரோகமாக தான் இது எனவும்  தெரிவித்தார்.

இதையும் படிக்க    | அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!