சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கெடு

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் அமைப்பது  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கெடு

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 7-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டவிரோதமாக  விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்குகளும், விழுப்புரத்தில் திமுக நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம் நாட்டிய போது, 13 வயது சிறுவன்  மின்சாரம் தாக்கி பலியானது தொடர்பான வழக்கும், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில், சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது எனவும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

டிராபிக் ராமசாமி இறந்து விட்டதால், அவருக்கு பதில் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி வழக்கறிஞர் அரவிந்த் மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், விபத்து ஏதும் நடந்து அதன் பின் விதிமீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட, சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைக்கப்படுவதை தடுப்பது முக்கியமானது எனத் தெரிவித்தனர்.

மேலும், சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் என்ன நடைமுறையை பின்பற்றுகின்றன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து  தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது, உரிய சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டனர்.