சிவசங்கர் பாபா மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்....வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்த புகார் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளனர்.

சிவசங்கர் பாபா மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்....வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகேயுள்ள சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் சிவசங்கர் பாபா உள்ளிட்ட அப்பள்ளியின் நிர்வாகிகளுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அப்போதும் சிவசங்கர் பாபா ஆஜராகாமல் பள்ளி நிர்வாகிகள் மட்டுமே ஆஜராகி விளக்கம் அளித்தனர். டேராடூனுக்கு ஆன்மீக பயணம் சென்ற சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் அப்பள்ளி மாணவிகள் 3 பேர் நேரடியாக புகார் அளித்ததன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி இருப்பது செங்கல்பட்டு மாவட்டம் என்பதாலும், குற்றம் சாட்டப்பட்டவர் டேராடூனில் இருப்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இவ்வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரிகளாக டி.எஸ்.பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.