ஆறு மாசம் ஆச்சு... நிலைமை கொஞ்சமும் சரியில்ல - ரொம்ப கவலையா இருக்கு - ஓபிஎஸ் அறிக்கை...!!

காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் இராமநாதபுரம் முதுகுளத்தூர் மணிகண்டன் மற்றும் விழுப்புரம் உலகநாதன் ஆகியோர் மரணத்திற்கு தமிழக காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆறு மாசம் ஆச்சு... நிலைமை கொஞ்சமும் சரியில்ல -  ரொம்ப கவலையா இருக்கு - ஓபிஎஸ் அறிக்கை...!!

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "

திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ் நாட்டில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாகவும், மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது இந்த சூழ்நிலையில் ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் நல்ல நிலையில் தான் இருந்தார் என்றால் காவல்துறையினரால் துன்புறுத்தப்படவில்லை என்றால் அவருடைய பெற்றோர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அழைத்துச் செல்லுமாறு கூறியது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்,

உறவினர்கள் கூறுவதுபோல் மணிகண்டன் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது? மணிகண்டனின் நண்பரை அழைத்து காவல்துறை விசாரணை நடத்தியதா? மணிகண்டனின் இறப்பிற்கு காரணம் என்ன? போன்ற சந்தேகங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன எனவே மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்ற விவசாயி அவரது மனைவியுடன் நேற்று தனக்குச் சொந்தமான நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை அருகே கட்டிலில் சுண்டல் போண்டா போன்ற ஆகியவற்றை விற்பனை செய்த போது காவல்துறையினர் தடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்த செய்திகளை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த இரு நிகழ்வுகளுக்கும் காவல்துறையினரின் மெத்தன போக்கே காரணம் என்பது செய்திகளைப் படிக்கும்போது கண்கூடாக தெரிகிறது எனவும் காவல்துறையினர் போக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு மணிகண்டன் மற்றும் உலகநாதன் ஆகியோர் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க ஆவன செய்ய வேண்டும்" என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.