பேராவூரணியில் கசடு கழிவு மேலாண்மை திட்டம்...! கே.என்.நேரு அறிவிப்பு...!!

பேராவூரணியில் கசடு கழிவு மேலாண்மை திட்டம்...! கே.என்.நேரு அறிவிப்பு...!!

பேராவூரணியில் கசடுக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை சேர்த்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றி கொடுக்க அரசு ஆவன செய்யுமா எனவும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா என்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகளில் மட்டும் தான் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கூடுதலாக மக்கள் தொகை அடிப்படையில் தான் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது என்றும், ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த மக்கள் விரும்புவதில்லை காரணம் 100 நாள் திட்டம் பேரூராட்சியாக மாறினால் வருவதில்லை என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஊரகத் தொழிற்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து, பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என கூறினார்.

அதேபோல், பாதாள சாக்கடை அமைக்கும் அளவிற்கு பேராவூரணியில் மக்கள் தொகை இல்லை எனவும் கழிவு நீர் அளவு குறைவாகவே உள்ளதாகவும் கூறிய அவர், சிறிய பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியப்படுமா என ஆராயப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேராவூரணியில் கசடு கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை சேர்த்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்