துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 65.43 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை நடவடிக்கை

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.65 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 65.43 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை நடவடிக்கை

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்  கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை என தெரியவந்தது. அதனையடுத்து பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனா். அப்போது  உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 39 லட்சத்தி 95 ஆயிரம் என்பது தெரியவந்தது.

அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பயணியிடம் ரூ. 18 லட்சத்தி 48 ஆயிரம் மதிப்புள்ள 349 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதுப்போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள 170 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 

ஒரே நாளில் ரூ. 65 லட்சத்தி 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 383 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.