"லட்சுமணனின் தாயின் சொற்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

"லட்சுமணனின் தாயின் சொற்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

ஒரு மகன் உயிரிழந்த போதும், தனது அடுத்த மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன் என லட்சுமணனின் தாய் கூறியது மெய்சிலிர்க்க வைத்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழக இராணுவ வீரருக்கு அஞ்சலி:

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். அவரின் இழப்பை தாங்காத பெற்றோர், மகனின் படத்தை வைத்து கதறி அழுகின்றனர். இந்நிலையில், நாட்டுக்காக உயிரை விட்ட தமிழக வீரருக்கு, அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கட்சி தலைவர்கள் அஞ்சலி:

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள், தனியார் அமைப்பினர், அவரின் வீட்டிற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் காஸ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து ராணுவ வீரரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

இராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன்னதாக லட்சுமணன் உடலை நல்லடக்கம் செய்யும் இடத்தை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், லட்சுமணனின் சகோதரருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும், தமிழக வீரர் லட்சுமணனை நல்லடக்கம் செய்யப்போகும் இடத்தில் அமையவுள்ள மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், முன்னதாக ஒருபேட்டியில், மகனின் படத்தை வைத்து கதறி அழுதுக்கொண்டிருந்த போதும், தனது அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் எனக் தயாார் கூறியது நெகிழ்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.