ஆடி வெள்ளி : அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு!

ஆடி வெள்ளி : அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு!

ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கிரேன்செடல் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி மணலூர் முத்துமாரியம்மன், சித்தலூர் ஜெகமுத்து மாரியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி செடல் திருவிழாவை முன்னிட்டு மணிமுக்தா நதிக்கரையில் இருந்து கிரேன்செடல் அணிந்து கிரேனில் தொங்கியவாறும் கன்னத்தில் அலகு குத்தியும் ஊர்வலமாக பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

அதேபோல் காஞ்சிபுரம் தும்பவனத்து அம்மன் கோயிலில்  ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை ஒட்டி தும்பவனத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மலர் மாலைகள் அணிவித்து, சந்தன அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்து  ஊரணி பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்தனர்.

இதையும் படிக்க : ”தமிழ் மண்ணை மாற்றக்கூடிய சக்தி; என் மண் என் மக்கள் '' மூலம் உருவாகும் - அண்ணாமலை!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துயர் துடைக்கும் மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்து விழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் சிறப்பு விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவிடைமருதூர் அருகே துகிலி துயர் துடைக்கும் மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஜக்காளம்மன்  கோயிலில் மாலை தாண்டும் விழா 22 ஆண்டுக்கு பிறகு வெகுசிறப்பாக நடைபெற்றது.  கடந்த 17 ம் தேதி சாமி சாட்டுதல்  நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழாவின் முக்கியநாளான நேற்று, எருது மாடு சந்திப்பு மாலை தாண்டும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், தேனி போடி,  உள்ளிட்ட  பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உலக நன்மைக்காக ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை கைலாசநாதர் கோயிலில் நடைபெற்றது. இந்தபூஜையில் திருச்செங்கோடு, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.