மலர்ந்தது ஆங்கில புத்தாண்டு 2022... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு...

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மலர்ந்தது ஆங்கில புத்தாண்டு 2022... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு...

2022 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழகத்தில் பொது இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி, சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி தேவாலயத்திலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புத்தாண்டை வரவேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

இதைப்போல கோவை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு வழிபட்ட மக்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.