ஸ்டாலின் Vs இ.பி.எஸ். சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ஸ்டாலின் Vs இ.பி.எஸ்.  சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, கூட்டம் தொடங்கிய உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். முதலாவதாக வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்த நபர், கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்ததாக, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த திமுக, அதனை நிறைவேற்றவில்லை என்றும், மாணவன் தனுஷ் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததாகவும், கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் என்றும் கூறினார்.

மேலும், நீட் தேர்வு ரத்து தொடர்பாக பேசிய முதலமைச்சர், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, இன்று சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் எதிர் கட்சியினரும் பங்கேற்று சட்டமசோதாவை நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் எந்த லட்சணத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், தற்போது எவ்வாறு கொண்டு வரப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக கூற உள்ளதாக தெரிவித்தார்.  
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.